ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு வரும் தெரியுமா?

நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்கிறோம்.

எம்எல்ஏவாக இருந்தவர் திடீரென முதல்வராவதும், கம்பெனியில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் திடீரென முதலாளியாவது ராகுவினால் தான்.

ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும்.

ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி
ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில்
பூமேடை தனில் துயிலும் ராஜயோகம்
போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்
தேமேவு பர்வதமா யோகமாகும்
சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே.

தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ‘ஜாதக அலங்காரம்’ ராகுவைப் பற்றி குறிப்பிடும் மேற்கண்ட பாடல்

இந்த பாடலின் முதல் மூன்று வரிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்து அதனுடைய திசை வரும் போது அந்த ஜாதகருக்கு ‘பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம்’ எனச் சொல்லுகிறது.

அடுத்த வரிகள் நான்கு கேந்திரங்களிலும் தொடர்ந்து கிரகங்கள் இருந்தால் சிறப்பான பர்வத யோகத்தை தரும் எனக் குறிப்பிடுகிறது.

ராகு திசை
ஒருவருக்கு ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார்.

கல்வியில் உயர்வு
ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புக்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும்.

திடீர் யோகம்
நடுத்தர வயதில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத பணவசதி, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

ராகு திசையில் ராஜயோகம்
மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து இந்த பாவங்களில் இருக்கும் ராகுவிற்கு கேந்திரங்களில், அதாவது ராகுவின் முதலாம் கேந்திரமான அவர் இருக்கும் வீட்டில் அவருடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு நான்கில் ஒன்று, அடுத்ததாக ராகுவிற்கு எதிரில் இருக்கும் கேதுவுடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு பத்தாமிடத்தில் ஒரு கிரகம் என இடைவிடாமல் கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை ராகு தன் தசையில் செய்யும்.

ராகுவின் அமர்வு
இதுபோன்ற அமைப்பில் ராகு பதினொன்றில் இருந்தாரெனில் மற்ற அனைத்துக் கிரகங்களும் பணபரஸ்தானங்கள் என்று சொல்லப்படும் இரண்டு ஐந்து எட்டு பதினொன்றில் இருக்கும். அப்போது பாக்யாதிபதி இரண்டில் இருக்கலாம். ஜீவனாதிபதி ஐந்தில் அமர்ந்து ராகுவைப் பார்க்கலாம். தனாதிபதி எட்டில் அமர்ந்து தன் வீட்டைப் பார்க்கலாம். பஞ்சமாதிபதி ராகுவுடன் இணைந்திருந்து ஜீவனாதிபதியைப் பார்க்கலாம்.

இந்த கேந்திர அமைப்பில் ராகு அனைத்துக் கிரகங்களின் இணைப்பினால் அவர்களின் பலத்தைக் கவர்ந்து தன் தசையில் மிகப் பெரிய தனலாபத்தை பொருளாதார வசதியைத் தரும்.

ராஜயோகம் ராகு
அதேபோல ராகு மூன்றாமிடத்தில் இருந்தாரெனில் மற்ற கிரகங்கள் ஆபோக்லிம ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மூன்று ஆறு ஒன்பது பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும். இந்த அமைப்பிலும் பாக்யாதிபதி தன் வீட்டிலோ அல்லது ராகுவுடன் இணைந்து தன் வீட்டைப் பார்வையிட்டோ மற்ற துர்ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தோ இருந்தார்கள் எனில் ராகு யோகம் செய்வார்.

யோகம் வரும் காலம்
அதே நேரத்தில் ராகுவுக்கு நான்கு கேந்திரங்களிலும் இடைவிடாமல் கிரகங்கள் இருக்கும் நிலையில் யோகம் பூரணமாகக் கிடைக்கும். ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது ராகு கேதுவுடன் கிரகங்கள் இணையாமல் ராகுவிற்கு இரண்டு பக்கங்களில் மட்டும் கிரகங்கள் இருந்தாலும் யோக அமைப்புத்தான் ஏற்படும். ஆனால் இந்த யோகம் செயல்பட வேண்டுமெனில் ஜாதகருக்கு ராகுதசை நடக்க வேண்டும்.

ராகுவின் அருள்
ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில்தொலைவில்லி மங்கலம் பரிகார ஸ்தலமாகும். சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஞாயிறு மாலை ராகு காலத்தில் அர்ச்சனை செய்யலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*